பள்ளி பகுதிநேர துப்புரவுப் பணியாளர்களின் ஊதிய நிலுவைகளை வழங்கக் கோரிக்கை
By நாகப்பட்டினம்,
First Published : 29 April 2013 04:10 AM IST
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்குள்பட்ட பள்ளிகளின் பகுதி நேர துப்புரவுப் பணியாளர்களின் ஊதிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நாகை மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன், நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:
நாகை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் 26 தொடக்கப் பள்ளிகளும், 9 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில், 16 பள்ளிகளில் மட்டும் பகுதி நேர பள்ளி கூட்டுநர்கள் பணியில் உள்ளனர். மீதமுள்ள 19 பள்ளிகளில் இப்பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணியில் உள்ள 16 பணியாளர்களுக்கும் மாதம் ரூ. 150 வீதம் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியமும் கடந்த அக்டோபர் மாதம் முதல் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தப் போக்கு, மாணவர்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.
இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரை பல முறை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், இதுவரை பள்ளி கூட்டுநர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு ஊராட்சி ஒன்றிய பள்ளி கூட்டுநர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கவும், பிற ஊராட்சி ஒன்றியங்களில் வழங்கப்படுவதைப் போல கூட்டுநர்களுக்கான மாத ஊதியத்தை ரூ. 335-ஆக உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment