ஆங்கிலம் முதல்தாள் மாயமான விவகாரம்: மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை
By dn, சென்னை
First Published : 09 April 2013 05:31 AM IST
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலம் முதல் தாள் எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போனதால் அவர்களின் ஆங்கிலம் இரண்டாம் தாள் மதிப்பெண்களே வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது ஆங்கிலம் முதல் தாள் எழுதிய 221 மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போனது.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியும் விடைத்தாள் பார்சல் மாயமானது எவ்வாறு என்பது இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், சம்பந்தபட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இந்நிலையில், மறுதேர்வு நடத்தப்படாது. ஆங்கிலம் இரண்டாம் தாள் மதிப்பெண்களே முதல் தாளுக்கு வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்வில் சத்தியமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 221 மாணவர்களின் விடைத்தாள் கட்டுகள் சத்தியமங்கலம் அஞ்சல் நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லும்போது காணாமல் போனது.
இந்த நிலையில் மறுதேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும் என்பதால் அவர்களின் நலன் பாதிக்காத வகையில் விடைத்தாள்கள் காணாமல் போன 221 மாணவர்களுக்கும் அவர்கள் ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களேயே ஆங்கிலம் முதல் தாளுக்கும் வழங்கி தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஆங்கிலம் இரண்டாம் தாளில் தோல்வி அடைந்திருந்தால் அவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதம் அளித்து அதில் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment