பள்ளி இயங்காததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
திருத்தணி: ஊராட்சி ஒன்றிய பள்ளியில், "அம்மா" திட்டம் செயல்பட்டதால், தேர்வு நேரத்தில் பள்ளி இயங்காமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. அம்மா திட்டம் நடைபெற்ற இடங்களுக்கு, வருவாய் துறையினர் ஒட்டு மொத்தமாக சென்றதால், வட்டாட்சியர் அலுவலகத்தில், அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், மத்தூர் ஊராட்சியில் நேற்று, "அம்மா திட்டம்" செயல்படுத்தப்பட்டது. வட்டாட்சியர் வளர்மதி, சேர்மன் ரவி, வட்ட வழங்கல் அலுவலர் முனியசேகரன் ஆகியோர் முன்னிலையில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலை முதல் பிற்பகல் வரை, கிராம மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. நேற்று முழுவதும் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதால், நாள் முழுவதும் பள்ளி இயங்கவில்லை.
இதனால், முழு ஆண்டு தேர்வை எதிர்நோக்கி இருக்கும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. திருத்தணி ஒன்றியத்தில், மத்தூர் ஊராட்சியுடன், தாழவேடு மற்றும் வி.கே.ஆர்.புரம் ஆகிய மூன்று ஊராட்சிகளில், "அம்மா திட்டம்" செயல்படுத்தப்பட்டது.
இதனால், திருத்தணி வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் ஒரு சிலரை தவிர, ஒட்டு மொத்தமாக திட்டம் நடைபெற்ற இடங்களுக்கு சென்றனர். இதனால், வட்டாட்சியர் அலுவலகத்தின், அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டதுடன், பலதரப்பட்ட தேவைகளுக்காக, வந்திருந்த பொதுமக்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
No comments:
Post a Comment