கோவை: ஆசிரியர்களுக்கு ‘17ஏ‘ நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து, கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர்.
கோவை மாவட்டத்தில் அரசு துவக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வை தொடர்ந்து, 45 ஆசிரியர்களுக்கு நடவடிக்கை நோட்டீஸ்(17ஏ) வழங்கப்பட்டது. இதை கண்டித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் மணிகண்டன், செயலாளர் ஆனந்தராமன், பொருளாளர் கருப்புசாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் நேற்றிரவு முற்றுகையிட்டனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு நலத்திட்ட பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதால், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. தொடக்க கல்வி அலுவலர் பள்ளிகளில் ஆய்வு நடத்தினார். மாணவர்களின் கட்டுரை நோட்டுகளில் உள்ள பிழைகளை ஆசிரியர்கள் சரியாக திருத்தவில்லை எனக்கூறி ஆசிரியர்களுக்கு ‘17ஏ‘ நோட்டீஸ் வழங்கினர். இதனால், ஊதிய உயர்வு பாதிக்கப்படும். இதுவரை இதுபோன்ற காரணங்களுக்கு ‘17ஏ‘ நோட்டீஸ் வழங்கப்படவில்லை. நோட்டீசை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், ‘நடவடிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதில் விதிமுறை மீறல் கிடையாது. தவறு செய்தவர்கள் மீது நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. இந்த நோட்டீஸ் திரும்ப பெற மாட்டாது‘ என்றார்.
No comments:
Post a Comment