பிப்ரவரி 07,2013,08:24 IST
தேவகோட்டை : சிவகங்கை மாவட்டத்தில், ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் அரசு பள்ளியில், இரு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் சக்கந்தியில் 35 ஆண்டுகளாக, ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், முன்னாள் முதல்வர்களின் படங்களுடன், நான்கு பெரிய பீரோக்கள், வாட்டர் பில்டர், டி.வி.,- சர்வசிக்ஷா திட்டத்தில் ஆசிரியர்கள் வசதியாக அமர சேர்கள், மாணவர்களுக்கு பெஞ்ச் என அனைத்து வசதிகளும் உள்ளன.
ஆனால், இப்பள்ளியில் தினேஷ், என்ற ஒரே ஒரு மாணவர் மட்டுமே தற்போது படிக்கின்றார். தலைமையாசிரியர் மட்டும் பாடம் நடத்தி வந்த இப்பள்ளியில், "ஒரே ஒரு மாணவரின் கல்வி நலன் கருதி"அரசு கடந்த மாதம் கூடுதலாக ஒரு பெண் ஆசிரியரை நியமித்துள்ளது.
அந்த ஆசிரியையும் மாணவரை அருகில் அமர வைத்து, சிறப்பு பயிற்சி அளிக்கிறார். ஒரே மாணவரையும் "தக்க"வைத்துக் கொள்வதற்காக, இப்பள்ளியில், சத்துணவு மையமும், அதற்கு ஒரு அமைப்பாளரும் உள்ளனர்.
பள்ளிக்கு தவறாமல் மாணவர் தினேஷ் வரவேண்டும் என்பதற்காக, அவருக்கு தினமும், சாக்லெட், பிஸ்கட், முறுக்கு வாங்கி கொடுக்கின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த பல குழந்தைகளை, 10 கி.மீ., தொலைவில் தேவகோட்டை, முப்பையூரில் உள்ள பள்ளிகளில் "கட்டணம் செலுத்தி"படிக்க வைக்கின்றனர்.
அரசு பள்ளி தலைமையாசிரியர் தனீஸ்லாஸ் கூறுகையில், "2 முறை கிராம கூட்டம் நடத்தி பேசியிருக்கிறோம். தமிழ் வழியோடு, ஆங்கில வழியிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக பாடம் கற்றுத் தருவதாக உறுதியளித்து விட்டோம். வரும் ஆண்டிலாவது குழந்தைகளை சேர்ப்பார்கள், என நம்புகிறோம்"என்றார்.
கல்வித்துறை அதிகாரிகள், இது போன்று தடுமாறும் பள்ளிகள் உள்ள கிராமத்திற்கு சென்று, சமச்சீர் கல்வி கற்பிக்கப்படுவதை புரியும்படியாக, கிராம மக்களிடம் விளக்கிக் கூறி, மாணவர்களை சேர்க்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment