மூத்த
குடிமகளின் டைரி
நான் அரசுக் கல்லூரிப் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவள். இப்போது என் வயது 75. இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் (வருடம் நினைவில்லை) ஊதிய உயர்வு கேட்டு (பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி), கல்லூரிப் பேராசிரியர்கள் போராட்டம் தொடங்கினார்கள். அது மாபெரும் கிளர்ச்சியாக மாறியது. அந்த நாட்களில் எங்கள் போராட்டம் உள்வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் போன்ற படிகளைத் தாண்டி, சிறை நிரப்பும் போராட்டமாக மாறியது. ‘மறியல் செய்யும்போது கைது செய்யப்படுவீர்கள்; சிறைத் தண்டனையும் கிடைக்கலாம்; எதற்கும் ஆயத்தமாக வாருங்கள்’ என்று போராட்டக்குழு எச்சரிக்கை செய்திருந்தது. மறியல் செய்தோம்; ஆட்டு மந்தைகளைப்போல் எங்களை காவல்துறை ஊர்தியில் ஏற்றினர். காவற்படை மைதானத்தில் இறக்கிவிட்டனர். எங்கள் கல்லூரியில் அறுபது பேர் பணியாற்ற, 5 ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.
போராட்டத்துக்கு வராத ஆசிரியப் பெருமக்கள், கல்லூரிக்கு மாணவர்கள் யாரும் வராத காரணத்தால், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டபின் வீடு நோக்கி முன்கூட்டியே சென்றுவிட்டனர். அப்போது பலர், போராட்டத்தில் கலந்துகொண்ட எங்களைக் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்தனர். நாங்கள் தக்காளி சாதப் பொட்டலத்திற்குத்தான் போராட்டத்தில் கலந்துகொண்டோமென்றும் கமெண்ட் அடித்தனர்.
கைது செய்யப்பட்ட எங்கள் பதினோரு பேரை நீதிமன்றத்திற்குக் கூட்டிச் சென்றனர். மாஜிஸ்திரேட் முன்னால், குற்றவாளிக் கூண்டில் நின்றோம். விசாரணை இறுதியில் மாஜிஸ்திரேட், அரசுக்கு எதிராகப் போராடியதால் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துவிட்டார். நாங்கள் கேட்டுக்கொண்டபடி வேலூர் மகளிர் சிறைச்சாலைக்கு நாங்கள் அனைவரும் சென்றோம். பதினோரு நாட்கள் சென்றபின், எங்களுக்கு விடுதலை கிடைத்தது.
மீண்டும் நாங்கள் கல்லூரிக்குத் திரும்பினோம். ஏதோ வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போலவும், தீண்டத்தகாதவர்களைப் போலவும் போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வேலை போனால் என்ன? அவர்கள், ‘அந்த’ வேலை செய்து பிழைத்துக்கொள்வார்கள்’ என்று ஒரு பேராசிரியை கமெண்ட் அடித்ததாகக் கேள்விப்பட்டபோது நாங்கள் கொந்தளித்தோம். இச்செய்தி, ஆண்கள் கல்லூரிக்கு எட்டியது. அவர்களும் திரண்டு வந்தனர். கோஷங்கள் எழுந்தன. அப்படி கமெண்ட் அடித்தவர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றனர். கல்லூரி முதல்வர், போராட்டத்தில் ஈடுபடாத பேராசிரியர்கள் புடைசூழ மைதானத்திற்கு வந்தார். கமெண்ட் அடித்தவர் சார்பாக, தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறினார். எங்களுக்கு, ‘ச்சே’ என்றாகிவிட்டது. சில நாட்களில் எங்கள் போராட்டம் வெற்றி பெற்றது. அந்த ஊதிய உயர்வுப் பரிசைப் பெறவேண்டி, போராட்டத்தில் ஈடுபடாத பேராசிரியர்களும் அலுவலக நண்பர்களிடம் ஓடி ஓடி, தங்கள் ஊதிய நிர்ணயம் சரியாக அமைந்திருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, எங்கள் இதழ்களில் சிறிய முறுவல்தான் தோன்றியது. நாங்கள் போராடியபோது, ஒதுங்கி நின்று ஆபாசமாக விமர்சனம் செய்தவர்களும் ஆறாவது ஊதியக் குழு அளித்த சலுகையால், இன்று கை நிறைய ஓய்வூதியம் பெற்று வாழ்வாங்கு வாழ்கின்றனர்.
எனக்கு மகிழ்ச்சிதான். நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஓர் உரிமைக்காகப் போராடும்போது, நீங்கள் கலந்துகொள்ள முடியாவிட்டால், ஒதுங்கி நின்று மௌனமாக இருங்கள். வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்யாதீர்கள். போராடுகிறவர்கள், உங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறார்கள். போராட்டம் வென்றால், உங்களுக்கும் பலன் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
- செல்வி. அரங்க ராதா, பொள்ளாச்சி -2
No comments:
Post a Comment