சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம், சென்னை, பெருங்குடியில், பஸ் படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்கள் நான்கு பேர், லாரி மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை, சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை, ஐகோர்ட்டில் ஒரு பதில் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கூறியுள்ளதாவது: சென்னையில், பள்ளி வேலை நேரத்தை, காலை, 7:30 மணியில் இருந்தும், கல்லூரி வேலை நேரத்தை, 8:00 மணியில் இருந்தும் துவங்கும் வகையில், மாற்றம் செய்யலாம். இந்தக் கருத்தை, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம் தெரிவித்துள்ளோம். மேலும், கல்வி நிறுவனங்கள் துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மத்தியில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், காலை, 8:45 மற்றும் 9:00 மணிக்கு துவங்குகின்றன. தனியார் பள்ளிகள், 8:00 மணியில் இருந்து, 8:30க்குள் துவங்கப்படுகின்றன. தற்போதைய நேரத்தை மாற்றினால், பள்ளியின் தூரத்தை பொறுத்து, முன்கூட்டியே மாணவர்கள் கிளம்ப வேண்டியிருக்கும். குறைந்தபட்சம், 6:45 மணி முதல் கிளம்ப வேண்டியிருக்கும். இதற்கு, அதிகாலை, 5:00 அல்லது 5:30க்கே எழுந்து, குளித்து முடித்து, தயாராக வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள், ஆரம்பத்திலேயே எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.
கல்வித்துறை தயார் : இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள நேரத்திற்கு, பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும், பிரச்னை தீராது; போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக ஏற்படும். நேரத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு. அரசு உத்தரவிட்டால், நேரத்தை மாற்ற நாங்கள் தயார்' என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டம், 10ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment