சிறப்பான வாசிக்கும் திறனை வளர்ப்பது எப்படி?
பள்ளிகளில், குழந்தைகளிடம் வளர்க்கப்பட வேண்டிய திறன்களில், அலட்சியப்படுத்தப்படுவதில் முக்கியமான ஒன்றாக திகழ்வது வாசிக்கும் திறன்தான்.
பாடங்களை மனப்பாடம் செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகள், உள்ளார்ந்து வாசிக்கும் திறனை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஒரு சிறந்த கற்றல் செயல்பாட்டில், வாசிக்கும் திறன் என்பது அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. வாசிப்பு என்பது இல்லாமல், படித்தல் என்ற செயல்பாடே கிடையாது.
வாசிக்கும் திறன் என்பது ஒரு குழந்தையிடம் பயிற்சியின் மூலமாக வார்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி, தொடக்கக் கல்வி நிலையிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒரு பத்தியை சிறப்பாக படிப்பதற்கு, சில முக்கிய திறன்கள் தேவை. அந்த திறன்கள், முறையான உதவியின் மூலமே பெறப்பட முடியும்.
முதலில், வகுப்பறையில் சக மாணவர்களின் முன்பாக, பயமின்றி வாசிக்கும் பழக்கம் ஒரு குழந்தைக்கு ஏற்பட வேண்டும். இந்த தைரியத்தை, ஒரு ஆசிரியரின் தொடர்ச்சியான உற்சாகத்தின் மூலமாகவே குழந்தை அடையும். குழந்தையின் சிறு தவறுகளை ஆசிரியர் பெரிதுபடுத்துதல் கூடாது. வாசிக்கும்போது, தனது தவறுகளுக்காக தான் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் குழந்தைகளுக்கு இருத்தல் கூடாது. இதை ஆசிரியர் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், இந்த பயம் இருந்தால், குழந்தையானது முன்னேற்ற பாதையில் செல்வது தடைபடும்.
வாசிக்கும் திறனை வளர்த்தல் என்பது, பதட்டமற்ற மற்றும் தெளிவான மனோநிலையில் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். அமைதியான மற்றும் தெளிவான மனோநிலையை, நல்ல விளையாட்டுக்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றின் மூலமாக பெறலாம். மேலும், ஆசிரியரின் பங்களிப்பும் இன்றியமையாதது.
வேகமாகவும், அவசரமாகவும் வாசிப்பதென்பது, படித்தல் செயல்பாட்டிற்கு உதவாது. ஒரு விஷயத்தை சிறப்பாக உள்வாங்க வேண்டுமெனில், நிதானமாகவும், பொறுமையாகவும் வாசிப்பது முக்கியம்.
ஆரம்ப வகுப்பிலிருந்தே, வாசிக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையாக புரிந்துகொள்வதோடு, அதன் தொடர்புடைய அர்த்தங்களையும் புரிந்துகொள்ள பழக வேண்டும். இதன்மூலம், படிக்கும் விஷயத்தைப் பற்றிய, பரவலான மற்றும் தெளிவான புரிதல் ஏற்படும்.
ஒவ்வொரு பள்ளியும், கட்டாயம் ஒரு நூலகத்தை வைத்திருக்க வேண்டும். ஒருவேளை, தான் படிக்கும் பள்ளியில் நூலகம் இல்லையெனில், பள்ளிக்கு வெளியேயுள்ள ஊர் பொது நூலகம் அல்லது மாவட்ட மைய நூலகம் ஆகியவற்றில் உறுப்பினராகி, ஒர மாணவர், வாசிக்கும் பழக்கத்தை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை, நூலகத்தையே அணுக முடியாத நிலை ஏற்படினும்கூட, தனது பாடப் புத்தகங்களையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி, வாசிக்கும் பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கையில், தெரியாத வார்த்தைகளை அறிந்துகொள்ள, அகராதியையும்(dictionary) அருகே வைத்துக் கொள்ளலாம்.
சிறப்பான வாசித்தல் திறனை வளர்த்துக் கொள்வதானது, ஒரு மாணவரின், ஆர்வம் மற்றும் விடா முயற்சியினை பொறுத்தே அமைகிறது என்பதை எப்போதும் மறக்கலாகாது.
No comments:
Post a Comment