புதுடில்லி :பள்ளிக் குழந்தைகளிடம் ஜாதி, மத அடிப்படையில், பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளதற்கு, கவலை தெரிவித்துள்ள தேசிய ஆலோசனை குழு, "இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை வலியுறுத்தி உள்ளது.
சோனியா தலைமையிலான, தேசிய ஆலோசனை கவுன்சிலான, என்.ஏ.சி.,க்கு, சமீபகாலமாக, பள்ளிகளில், குழந்தைகளிடையே ஜாதி, மத வேறுபாடுகள் பார்க்கப்படுவதாக, அதிக புகார்கள் வந்தன.இது குறித்து ஆலோசனை நடத்திய என்.ஏ.சி., இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு, சில ஆலோசனைகளை கூறியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பள்ளிகளில், மாணவர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்வது, தண்ணீர் வழங்குவது, மதிய உணவு வழங்குவது போன்ற விஷயங்களில், பாரபட்சம்
காட்டப்படுவதாக, புகார்கள் வருகின்றன.குழந்தைகளிடம் ஜாதி, மதம், இனம், பெற்றோரின் தொழில், உடல்நிலை ஆகியவற்றின் அடிப்படையில், வேறுபாடு காட்டப்படுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது. பள்ளி நிர்வாகங்களின், இதுபோன்ற நடவடிக்கைகள், குழந்தைகளின் ஒட்டு மொத்த எதிர்காலத்திலும், பாதிப்பை ஏற்படுத்திவிடும்.உடனடியாக, மாநில அரசுகளுடன் ஆலோசித்து, கல்வித் துறை நிபுணர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதை தடுப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, என்.ஏ.சி., தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment