ஜனவரி 21,2013,10:39 IST
ஊட்டி: "மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கல்வி அறிவை கற்பிப்பதோடு, மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும்" என, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சியில் அறிவுரை வழங்கப்பட்டது.
டி.இ.டி., தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், ஆசிரியர்களாக சேர்ந்துள்ளனர். புதியதாக பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2 நாட்களாக நடந்தது.
பயிற்சி முகாமில், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வசந்தா பேசியதாவது: புதியதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். அனைத்து துறையிலும் வல்லுநர்களை உருவாக்குவது, ஆசிரியர்களாகிய நீங்கள் தான்.
பணம் ஈட்டுவது பெரிய விஷயமல்ல, பெயர் ஈட்டுவது தான் சிறப்பானது.மாணவர்களின் குணநலன்கள், மனநிலையை புரிந்து அரவணைத்து, ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கல்வி அறிவை கற்பிப்பதோடு, மன நிலையை நன்கு புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடக்க கல்வி அலுவலர் லட்சுமணன் பேசும் போது, "ஆசிரியர் பணி என்பது சிறப்பான ஒன்று; ஓய்வு பெறும் வரை, உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும். சிறந்த சமுதாயத்தை உருவாக்க, மாணவர்களின் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது" என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் வாசு பேசுகையில், "ஆசிரியர்கள், தங்களின் சிறப்பான பணியின் மூலம், மாணவர்கள் சிறந்து விளங்கி, அதன் பயன் சமுதாயத்தை சென்றடைய வேண்டும். இப்பயிற்சியில் கூறப்படும் பல்வேறு கருத்துகளை உள்வாங்கி, நன்றாக பயன்படுத்தி, சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்" என்றார்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) அர்ஜூனன், ஆர்.எம்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் என். ஆர்ஜூனன், பள்ளி தலைமையாசிரியர் ருக்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாம், நேற்றுடன் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment