சென்னை: "வரும் கல்வியாண்டில், மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை, ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கையில், 100 சதவீதத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தற்போதே, விழிப்புணர்வு முகாம், பேரணி மற்றும் விழா நடத்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்கக் கல்வி இயக்குனரகம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து, தமிழகம் முழுவதும், சிறப்பு சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. விழிப்புணர்வு பேரணியில், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், கல்வி அலுவலர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டும்.
இதற்கான பேரணி முன்னேற்பாடுகள், அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தி முடிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு, 100 சதவீதம், குழந்தைகளை அனுப்பும் கிராமங்களுக்கு, பரிசு வழங்கி கவுரவித்தல், நலத் திட்ட உதவிகள் சார்ந்த அனைத்து திட்டங்கள், இலவச சலுகைகள் போன்றவற்றை விளம்பரப்படுத்த வேண்டும். வீதி நாடகங்கள், பாடல்கள், சிறு நாடகங்கள், பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment