சென்னை: கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தி, இரண்டாண்டுகளாகியும், பள்ளியில் இடைநிற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 2010, ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, பள்ளிகளில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 10 சதவீதம் மாணவர்கள் இடைநிற்கும் நிலை உள்ளது. இதை மறைத்து, பெரும்பாலான பள்ளிகளில், புள்ளி விவரங்கள் தயாரிக்கப்படுகிறது. கட்டாயக்கல்வி சட்டத்தில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையே இருக்கக்கூடாது எனவும், இதற்காக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான பிரச்சாரம், " பிரிட்ஜ் கோர்ஸ்&' மையங்கள் என, பல்வித செயல்பாடுகள் இருந்தன. தற்போது, அவையும் செயல்படுத்தப்படுவதில்லை. இதனால், கிராமப்பகுதிகளில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்தவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும், தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் சேர்ப்பதற்கான, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளியில், இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில், சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மூன்று மாதம் வரை பயிற்சி வழங்கி, அந்தந்த வயதுக்குரிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
பல குழந்தைகளை, பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல், விவசாயம் உட்பட, பல்வேறு பணிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். கலெக்டரிடம் புகார் கொடுத்து, போலீஸ் மூலம் மிரட்டி, இடைநின்ற மாணவனை பள்ளிக்கு வரவழைத்தாலும், ஒரு சில நாட்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாத நிலை உள்ளது.
உயர் அதிகாரிகள் கண்டிப்பார்களோ என்ற பயத்தில், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கையை மறைத்து விடுகின்றனர். இடையில் நிற்கும் மாணவன், தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டதாகவோ, வேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்றதாகவோ, கணக்கு காட்டி விடுகின்றனர். தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment