கட்டாய கல்வி உரிமை சட்டம்: தன்னார்வ குழுக்களுக்கு பயிற்சி-22-06-2012
தேனி : கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள தன்னார்வ குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டம், 2010 பிப்.,24 ல் அமல்படுத்தப்பட்டது. 6 முதல் 14 வயதுள்ள சிறுவர்கள், வறுமை உள்ளிட்ட காரணங்களால் வேலைக்கு செல்வதை தடுப்பதற்காக, கல்வி பெறுவது உரிமையாக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி 7 வயது சிறுவன் பள்ளி செல்லாமல் இருந்தால், அந்த சிறுவனின் வயதுக்கு ஏற்ப மூன்றாம் வகுப்பில் சேர்த்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் இல்லாவிட்டாலும், எளிய நடைமுறையில் சேர்த்துக் கொள்ளவும், இந்த சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமம் முதல் நகரங்களிலும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஆசிரிய பயிற்றுனர்கள் 5 பேர் தலைமையில் 30 பேர் கொண்ட தன்னார்வ குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு இந்த சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 413 ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 30 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 390 தன்னார்வ குழு உறுப்பினர்களுக்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் பயிற்சி அளித்து, விழிப்புணர்வுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க உள்ளனர். அதன்பின், இவர்கள் அனைத்து தரப்பினருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.
No comments:
Post a Comment