பள்ளி மாணவர்களுக்கு அழகிய புத்தகப்பை, காலணிகள்-15-06-2012
சென்னை: ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் சைக்கிள்கள் ஆகியவை மாணவர்ளுக்கு வழங்கப்பட்டு வந்தன. தற்போது, அந்தப் பட்டியலில் புதிதாக, லேப்டாப், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, கலர் பென்சில், ஜியோமெட்ரி பாக்ஸ் மற்றும் அட்லஸ் ஆகியவை சேர்ந்துள்ளன. காலணிகளும் தற்போது புதிய டிசைன் மற்றும் வண்ணங்களில் வழங்கப்படவுள்ளன. இதனையடுத்து, அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பணியும் தனித்தனி துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காலணி மற்றும் கலர் பென்சில் வழங்கும் பொறுப்பு, தொடக்க கல்வி இயக்குனரகத்திடமும், அட்லஸ் வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமும் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் பணிகளும் நடைபெறுகின்றன.
விலையில்லா காலணிகள் 1 முதல் 10ம் வகுப்பு வரையில் படிக்கும், மொத்தம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவர்களுக்கு, காலணிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.94 கோடியே 76 லட்சம்.
விலையில்லா காலணிகளைப் பொறுத்தவரை, இந்தமுறை ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஒட்டுமொத்தமான ஒரு அளவில் தயாரித்து அனைவருக்கும் வழங்கி விடாமல், ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தனித்தனியே அளவெடுத்து, அதற்கேற்றபடி தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
லேசான பழுப்பு நிறம், அடர்த்தியான பழுப்பு நிறம் மற்றும் சாம்பல் நிறம் ஆகிய வண்ணங்களில் காலணிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களின் கால் அளவுகள் எடுக்கப்பட்டு, மொத்தமாக, தொடக்கக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பப்படும். தமிழகம் முழுவதுமிருந்தும் வரும் அளவுகளை கணக்கிட்டு, அதற்கேற்ப காலணிகள் தயாரிக்க ஆர்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment