ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-க்கு மாற்றம்
தமிழகத்தில் சுமார் 8 லட்சம் பேர் எழுதவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி ஜூலை 12-ம் தேதிக்கு (வியாழக்கிழமை) மாற்றப்பட்டுள்ளது. வேலைநாளில் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்தத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3-ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது.ஆசிரியர் பணியில் சேர வேண்டுமென்றால் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன் 3-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுத் தேதி மாற்றப்பட்டது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கும், தேர்வு வாரியத்துக்கும் கோரிக்கைகள் வரப்பெற்றன. தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட காலத்துக்கும், தேர்வு தேதிக்கும் இடையிலான காலம் மிகக் குறுகியதாக இருப்பதாகவும், தேர்வுக்குத் தயாராக போதுமான காலம் வழங்கப்பட வேண்டும் எனவும் தேர்வர்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.தேர்வு தேதியான ஜூன் 3-ம் தேதியன்று பிற தேர்வாணையங்களின் தேர்வுகளும் இருப்பதால் அவற்றை எதிர்கொள்வதில் மிகுந்த சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தக் காரணங்களின் அடிப்படையில் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, ஜூலை 12-ம் தேதி தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.வேலை நாளில் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதால் (ஜூலை 12-ம் தேதி வியாழக்கிழமை) தேர்வை சுமுகமான முறையில் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.வேலை நாளில் ஏன்? மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளும் விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால், இந்த நடைமுறைக்கு மாறாக வேலைநாளில் தேர்வுத் தேதியை மாற்றி அமைத்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.தனியார் நிறுவனங்களிலோ அல்லது பள்ளிகளிலோ வேலை பார்ப்பவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டுமானால் விடுமுறை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விடுமுறை கிடைக்காதவர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை இழந்து தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூலை மாதத்தில் விடுமுறை நாளில் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தேர்வர்கள் முன்வைக்கின்றனர்.
தேர்விலிருந்து யார் யாருக்கு விலக்கு...தகுதித் தேர்வை யார் எழுத வேண்டாம் என்கிற விளக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிட்டது. அதற்கு முன்பாக ஆசிரியர்கள் நியமனங்கள் செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியமில்லை.ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பு, 2010 ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பு வெளியாகி, நியமன உத்தரவுகள் அதற்குப் பின்பு வழங்கப்பட்டு இருந்தால் தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை. ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பு செய்யப்பட்டு அந்தத் தேதிக்குப் பிறகு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தால் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் யார் யார் என்கிற பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (http:trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பத்தின் நகல் மற்றும் வங்கியில் பணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை தேர்வு வாரிய அலுவலகத்துக்கு எடுத்து வந்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment