இலவச கட்டாய கல்வி - அரசின் நடவடிக்கை குறித்து பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு-19-05-2012
சென்னை: மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, நலிந்த பிரிவினருக்கு, பள்ளிகளில் 25 சதவீதம் இடம் அளிப்பது தொடர்பாக, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அயப்பாக்கம் வேலம்மாள் பள்ளி, சின்மயா நகர் வித்யாலயா பள்ளி, மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேஷன் வித்யாலயா, ஆதம்பாக்கம் டி.ஏ.வி., ஆகிய நான்கு பள்ளிகளுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில், பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.
அனுமதி இல்லை: இந்த மனுக்களில், அயப்பாக்கத்தை சேர்ந்த சேதுவராயர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2009ம் ஆண்டு, கட்டாய இலவசக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், நலிந்த பிரிவினருக்கு, அருகில் உள்ள பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில், 25 சதவீதம் இடம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, என் மகள் சுவாதியை, ஒன்றாம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பித்தேன். ஆனால், பள்ளியில் சேருவதற்கான அனுமதியை பள்ளி வழங்கவில்லை. பள்ளியின் சேர்க்கையும் முடிந்தது. மேலும், இது சம்பந்தமாக, பள்ளி நிர்வாகம் மற்றும் அரசிடம், கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தேன். அதற்கு, இது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
உத்தரவு: மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, என் மகளுக்கு முழு தகுதியும் உள்ளது. கட்டாய இலவசக் கல்வி சட்டத்தினை, முழுமையாக செயல்படுத்த வேண்டும் என, பல வழக்குகள் தொடரப்பட்ட பின்தான், அரசு அதை அமல்படுத்துவதற்கான முயற்சியை எடுத்தது.
ஆகையால், என் மகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் சேர, பள்ளி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என, மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி வி.தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு மீதான விசாரணை, வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, நலிந்த பிரிவினருக்கு, பள்ளிகளில் 25 சதவீதம் இடம் ஒதுக்குவது தொடர்பாக, அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என, நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment