SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Tuesday, May 15, 2012

IS TET NECESSARY ? ARTICLE IN www.testfnagai.blogspot.in


ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமா?

சமுதாயத்தில் ஆசிரியர்களின் பங்கும், பணியும் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியது என்பதில் ஐயமே இல்லை. ஒரு தலைமுறையை உருவாக்கும் தெய்வப் பணி; அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று அன்று முதல் அழைக்கப்படுகின்றனர். வணக்கத்துக்குரிய ஆசிரியர்களை வரலாறு மறப்பதில்லை.
ஓராண்டுக்குத் திட்டமிட வேண்டுமா? பயிர் செய்; பத்தாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மரங்களை நடு; நூறாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மனிதர்களை உருவாக்கு; இது சீனப் பழமொழி. மனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியைச் செய்பவர்கள் ஆசிரியர்களே!
இந்த ஆசிரியர்கள் தகுதி மிக்கவர்களாக இருப்பது அவசியம்தான்; தகுதியும், திறமையும், பண்பாடும், ஒழுக்கமும் உள்ள ஆசிரியர்களே தகுதியும், திறமையும், பண்பாடும், ஒழுக்கமும் உள்ள மாணவர்களை உருவாக்க முடியும்; பயிர்கள் செழித்து வளர்வதற்கு நிலவளமும், நீர்வளமும் வேண்டும்; உரம் இடுவது உயர் விளைச்சலுக்கு உதவும்.
வரும் ஜூன் 3 அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பட்டதாரிகள், ஆசிரியர் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்கள் என சுமார் 8 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 12 லட்சம் விற்பனையாகியுள்ளது. ஆயினும் எதிர்பார்த்தபடியே சுமார் 8 லட்சம் விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை வாங்குவதற்கு ஆசிரிய ஆசிரியைகள் பட்டபாடு கொஞ்சமல்ல.
சில இடங்களில் விண்ணப்பங்களை ஒழுங்காக விநியோகம் செய்யப்படாமையால் மோதல்கள் ஏற்பட்டன. விண்ணப்பங்கள் அதிக விலையில் கள்ளத்தனமாகவும் விற்பனையாயின என்பது வேடிக்கை மட்டுமல்ல, வேதனை. வேலை கிடைக்கிறதோ, இல்லையோ, விண்ணப்பம் கிடைத்தால் போதும் என எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது.
தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மிக அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகளில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விண்ணப்பித்தவர்களும், தகுதியானவர்களும் ஏராளமான ஐயங்களுடன் அனைத்து நாள்களிலும் வருகின்றனர். எங்கள் வாரியத்தில் மொத்தமே 14 பேர் மட்டுமே உள்ள நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு விளக்கமளிப்பது கடினமாக உள்ளது. இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே. சௌத்ரி கூறியுள்ளார்.
இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை வைத்துக் கொண்டுள்ள தேர்வு வாரியம் இமாலயப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளது. "குருவியின் தலையில் பனங்காய்' என்பது இதுதானா?
பள்ளிப் படிப்பு கூழாங்கற்களை மெருகேற்றும்; ஆனால் வைரங்களை ஒளிமழுங்கச் செய்யும்' என்று மேனாட்டறிஞர் குறிப்பிடுகிறார். இதுதான் இன்றைய நமது கல்வியின் உண்மையான நிலை. சராசரி மனிதர்களை முன்னேற்ற உதவும் இந்தக் கல்வியில் அறிவாளர்களைக் கவர்வதற்கு ஏதும் இல்லை; இதற்குக் காரணம் என்ன?
கல்வி முறையும், கற்பிக்கும் ஆசிரியர்களும் குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்; கலைத்திட்டம், பாடத் திட்டம், பயிற்சி முறை, தேர்வு முறை எல்லாம் அக்கால நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது. வளர்ந்து வரும் இக்காலச் சூழலுக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் நடத்தப்படும் பாடத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் சில மணி நேரத்தில் வெள்ளைத் தாளில் கறுப்பு எழுத்துகளை நிரப்புவதால் அவர்களின் தேர்ச்சித் திறனை எப்படி மதிப்பிட முடியும்?
இந்நிலையில் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு, பணிக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மறுபடியும் ஓர் எழுத்துத் தேர்வு நடத்துவது தேவைதானா?
திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதே இந்தத் தேர்வின் நோக்கம் என்று கூறப்படுகிறது. அப்படியானால் இதற்கு முன்பு பட்டம் பெற்று, பயிற்சியும் பெற்று, தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றதெல்லாம் தகுதியில்லை என்றாகிறது, இல்லையா?
இந்தத் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்களின் கல்வியறிவைச் சோதிக்கப் போதுமானதாக இருக்கலாம். ஆனால், இதுமட்டுமே ஓர் ஆசிரியரின் முழு ஆளுமையை வெளிப்படுத்தி விடுமா? ஆசிரியர்களுக்கான இலக்கணமாக நன்னூல் கூறுவது என்ன தெரியுமா?
"உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே'
என்று நன்னூல் நல்லாசிரியனுக்கு இலக்கணம் கூறுகிறது. நல்ல ஆசிரியருக்குப் படிப்பறிவோடு உலகியல் அறிவும் சேர்ந்திருக்க வேண்டும்; அத்துடன் உயர்ந்த குணங்கள் நிறையப் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வு ஆசிரியர்களின் கல்வியறிவைச் சோதனை செய்ய போதுமானதாக இருக்கலாம். ஆனால், அவர்களின் குணநலன்களையும், ஒழுக்கத்தையும் சோதனை செய்ய போதுமானதாக இருக்க முடியுமா?
ஆசிரியர்கள் எப்போதும் சமுதாயத்துக்கு குறிப்பாக மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்; அதற்குக் கல்வியறிவு மட்டும் போதுமா? நன்னடத்தை உடையவர்களாகவும் விளங்க வேண்டும்; ஆசிரியர் = ஆசு + இரியர்; அதாவது, குற்றங்கள் நீங்கியவர்களாக இருக்க வேண்டும்; இவ்வாறு ஆசிரியர்களின் குணநலன்களை இந்தத் தேர்வின் மூலம் கண்டுபிடிக்க முடியுமா?
தமிழ்நாடு அரசின் 2012-13-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மற்ற துறைகளுக்கான ஒதுக்கீட்டைவிடவும் பள்ளிக் கல்வித் துறைக்குச் சற்று கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும், பள்ளிக் குழந்தைகளுக்குப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்பதும், தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு 2012 உருவாக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்க அறிவிப்புகளாகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு' என்பது பாடம் நடத்தும் அளவுக்குத் திறமை ஆசிரியருக்கு வேண்டும் என்பதால் நடத்தப்படுகிறது என்று பள்ளிக் கல்வியமைச்சர் கூறியுள்ளார். எழுத்துத் தேர்வு தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழ்நாடு அரசு தகுதியுடைய ஆசிரியருக்கு மேலும் ஒரு தகுதித் தேர்வு நடத்துவது தேவையற்றது என்றே பெரும்பாலான ஆசிரியர்கள் கருதுகின்றனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்றால் அரசு உதவி பெறாத சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு தேவையில்லையா?
மத்திய அரசு 2009-இல் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதன்படி 6 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டும்; தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பொதுக்கல்வி மற்றும் பட்டம் பயின்ற பலர் பயிற்சி முடிக்காமல் ஆசிரியர் பணியில் உள்ளனர். இதற்காக இந்திய அளவில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் இரண்டு ஆண்டு தேர்வும், பட்டதாரி ஆசிரியர்கள் ஓராண்டுத் தேர்வும் எழுதி ஆசிரியர் பணிக்கான அரசின் சான்றிதழும், பட்டமும் பெற்றுள்ளனர். மீண்டும் ஒரு தகுதித் தேர்வு தேவையா? 2010 மார்ச் 28-க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் சரியான விதிமுறைதானா?
"மாணவர்கள் படிக்கும் காலத்தில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்காகச் செலவழித்த பணம் நாட்டுக்கே பெரும் இழப்பாகி விடும்'' என்றார் காந்தியார். ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்குவது யார்? ஒழுக்கம் உள்ள ஆசிரியர்களாலேயே முடியும்.


அறப்பணியாகிய ஆசிரியப் பணிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு வரும் ஆசிரியர்களாலேயே இது சாத்தியம். இவர்களை எந்தத் தகுதித் தேர்வுகளாலும் கண்டுபிடித்துவிட இயலாது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று குறள் கூறுகிறது. பிறக்கும்போதே யாரும் தகுதி, திறமையோடு பிறந்து விடுவதில்லை; ஆசிரியப் பணியில் அமர்த்தப்பட்ட ஒவ்வொருவரும் அதற்குரிய தகுதியையும், திறமையையும் வளர்த்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றனர். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆக வேண்டாமா? 

No comments: