சிவகங்கையில் தினமலர் நாளிதழ் சார்பில், ஆசிரியர் பயிற்சி, பி.எட்., படித்தவர்களுக்கு டி.இ.டி., வழிகாட்டி கருத்தரங்கு, ஆர்எம்., ராஜ்மோகன் வெங்கடேஸ்வரி மகாலில் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.
தேர்வை எதிர்கொள்வது பற்றி நிபுணர்கள் பேசியதாவது;
பொது அறிவு, கணிதம், சுற்றுச்சூழலியல் பற்றி மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம்: தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், தகுதி தேர்வும் ஒன்றாகும். தேர்ச்சி பெறுவதை விட அதிக மதிப்பெண் பெறுவதுதான் முக்கியம்.
இதில், பதிவு மூப்பில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி புத்தகங்களில் கேள்விகள் இருக்கும். தெளிவான சிந்தனையுடன் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். கேள்வியை படிக்கும் போதே விடை தெரிந்திருக்க வேண்டும்.
டி.டி.எட்., பி.எட்., தகுதித்தேர்வு எழுதுவோருக்கு, ஐந்து பாடப்பிரிவுகளில் தலா 30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை(அப்ஜெக்டிவ் டைப்) கேள்விகள் கேட்கப்படும். குழந்தை மேம்பாடு, கற்பித்தல் முறை, மொழி பாடமான தமிழ், ஆங்கிலத்தில் தலா 30 வீதம் 90 மதிப்பெண்கள் பெறலாம்.
இவை டி.டி.எட்., மற்றும் பி.எட் தேர்வு எழுதுவோருக்கும் பொதுவானது. இதுதவிர 60 மதிப்பெண்களுக்கு கணிதம், சூழ்நிலையியல் பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பி.எட்., பட்டதாரிகளுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறையும், தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்களில் 90 மதிப்பெண்களும், கணிதம், அறிவியல் பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
இதில் கலைப்பிரிவினருக்கு வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளாதாரம் பாடங்களில் இருந்து 60 கேள்விகள் கேட்கப்படும். அனைவரும் 150 கேள்விகளில் 60 சதவீத மதிப்பெண்கள் பெறுவதற்கு 90 கேள்விகளுக்கு சரியான பதில் எழுதி இருக்க வேண்டும்.
தமிழ் பாடம் குறித்து, மதுரை செந்தமிழ்க் கல்லூரி உதவி பேராசிரியர் செ.ராஜ்மோகன்: மதிப்பெண் அதிகம் கிடைக்கும் பாடம் தமிழ். சமச்சீர் பாட புத்தகங்களில் இலக்கணம் படித்தால் போதும். 1 முதல் 5ம் வகுப்பு வரையும், பி.எட்.,. 2ம் தாளுக்கு 6 முதல் 8ம் வகுப்பு வரையும் சமச்சீர் புத்தகம் படிக்கலாம். தமிழ் இலக்கிய வரலாறு அவசியம். ஆசிரியர் பரந்தாமன் எழுதிய, "நல்ல தமிழில் எழுத வேண்டுமா" புத்தகத்தை படித்தால் 30 மதிப்பெண்கள் பெறலாம்.
தாள் 1 மற்றும் 2க்கும், நூல் ஆசிரியர், அருஞ்சொற்பொருள், தொடரும் தொடர்பும் அறிதல், பிரித்து எழுதுக, அடைமொழியில் குறிக்கப்படும் நூல், நூலாசிரியர், பிறமொழி சொற்களை நீக்கி எழுதுக, மரபுவழு நீக்கி சொற்களை எழுதுக, எவ்வகை வாக்கியம் என கண்டறிதல், பெயர்ச்சொல்லி வகையறிதல் பகுதிகளை படித்தால் போதும்.
ஆங்கிலம் பற்றி மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக அதிகாரி எம்.எஸ். வெங்கடாஜலபதி: ஆங்கிலத்தில் இலக்கணம் அதிகம் படித்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். "நவுன்", "புரோநவுனில்" டெட்டு பகுதிகளை முழுமையாக கற்க வேண்டும். நெகடிவ் மார்க் இல்லாததால் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கவேண்டும்.
குழந்தை மேம்பாடு, கற்பித்தல் முறை குறித்து, வேம்பரளி பெனியேல் கிராமிய கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.பிரகாஷ்: குழந்தை மேம்பாடும் பயிற்சியும் பாடத்தில், குழந்தை வளர்ச்சி, கற்பித்தல் என இரண்டு பகுதிகளாக படிக்க வேண்டும். இதில் மனிதவளர்ச்சி பற்றி 12 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருக்கும். மனதின் நடத்தை பற்றி படிக்கும் அறிவியல் உளவியல். இப்போதுள்ள பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் 30 மதிப்பெண்கள் பெறலாம்.
கற்றல் தலைப்பை படித்தால் 12 மதிப்பெண்களுக்கு கேள்விவரும். நுண்ணறிவு பாடத்தில் கேள்விகள் இருக்கும். ஆறு முதல் 11 வயது மாணவர்களின் நடத்தை பற்றி அறியும் உளவியல் மற்றும் கற்பித்தல் பாடங்கள்தான் இதில் கேள்வியாக இருக்கும். கல்வி உளவியல் தன்மை, புலனறிவு, உணர்அறிவு, ஒழுக்கம் சமூக நீதி நெறிமுறைகள், கற்றல், நுண்ணறிவு, ஊக்குவித்தல், ஆளுமை அறிவில் கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment