கல்வி வியாபாரம் மும்முரமாக நடக்கும் தமிழகத்தில், சம காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று நினைக்கும்போது அப்படியே மெய் சிலிர்க்கிறது. என்ன கொடுமை 'சரஸ்வதி'? தனியார் பள்ளியில் பிள்ளையை சேர்க்க துடிக்கும் பெற்றோர் ஒருபுறம், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று மொத்தமாக சுரண்ட நினைக்கும் பள்ளி நிர்வாகம் ஒருபுறம், இதில் பிள்ளைகளின் பாடுதான் திண்டாட்டமாகிறது. பாவம் பெற்றோரையும் குற்றம் கூற முடியாது. வேலைப்பளு அவர்களை அவ்வாறு கட்டாயப்படுத்துகிறது. தான் கவனிக்காவிட்டாலும் பள்ளியும், ஆசிரியரும் கவனிப்பார்கள் என்று எண்ணி நல்ல தரமான பள்ளியை நோக்கி படை எடுக்கிறார்கள். இதுதான் சமயம் என்று பள்ளி நிர்வாகமும் தனி கட்டணம், சிறப்பு கட்டணம், கட்டட மேம்பாடு கட்டணம், பேருந்து கட்டணம், புத்தக கட்டணம் மற்றும் இன்ன பிற கட்டணங்களை விதித்து பெற்றோரை விழி பிதுங்க வைக்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலையா? இல்லை இந்தியா முழுவதுமே இந்த நிலை தானா? கடவுளுக்கு தான் வெளிச்சம். புற்றீசல் போல இன்று எங்கு நோக்கினும் பள்ளி, கல்லூரி என்று இருந்தாலும் இந்த கட்டண முறை அனைத்தையும் பாழ் படுத்திவிடுகிறது. இன்றைய எல்.கே.ஜி யின் விலை 20 ஆயிரம். நாளைய கல்லூரி கட்டணத்தை நினைக்கும் பொது இதயம் நின்று விடும் போலிருக்கிறது.
இவ்வளவு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் இருந்தும் மக்கள் தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கல்'ஐ எதிர்க்கும் இந்நாட்டு குடிமக்கள் பள்ளிகள் தனியார் மயமாக்கல்'ஐ வரவேற்றது ஏன்? நல்ல தரமான கல்வியை தர அரசு பள்ளிகள் முன்வந்தாலும், தனியாருக்கு இருக்கும் மவுசு இவற்றுக்கு இல்லை என்றே சொல்லலாம். இதற்கு 'பாட திட்டமும்' ஒரு காரணம். உலக அளவில் ஒருவன் உயர தாய்மொழி வழி கல்வி உதவாது என்ற நல்லெண்ணம் (!) தான் காரணம். இதற்கு பாட திட்டத்தில் நல்ல மாற்றம் தேவை. மெட்ரிக், CBSE க்கு இணையானதொரு பட திட்டம் தேவை.
பெற்றோர்களே! தனியார் பள்ளிகளை ஒதுக்கி, அரசு பள்ளிகளின் தரம் உயர அரசுக்கு தோள் கொடுங்கள். இந்த கல்வி கட்டண பூதத்தை நாட்டை விட்டே விரட்டுங்கள்.
No comments:
Post a Comment