மாணவர் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர். சிவபதி கூறினார்.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ப.மணி, அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி உள்ளிட்ட இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் அமைச்சர் என்.ஆர். சிவபதி கூறியது:
தமிழக அரசின் சார்பில் மாணவர்களின் நலன்களுக்காக இலவச லேப்-டாப் திட்டம், சிறப்பு ஊக்கத் தொகை திட்டம் உள்பட 14 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், பள்ளிகளில் ஆசிரியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் மாவட்ட அளவில் இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நலத்திட்டங்களின் அமலாக்கம் குறித்து தமிழக அரசுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இணை இயக்குநர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்:
1. எஸ். உமா - திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம்.
2. வி.சி. ராமேஸ்வர முருகன் - வேலூர், திருவண்ணாமலை.
3. வி. ராஜராஜேஸ்வரி - கிருஷ்ணகிரி, தருமபுரி.
4. என். லதா - விழுப்புரம், கடலூர்.
5. பாலமுருகன் - சேலம், நாமக்கல், ஈரோடு.
6. சி. உஷாராணி - பெரம்பலூர், அரியலூர், திருச்சி.
7. பிச்சை - கரூர், திருப்பூர், கோவை.
8. கண்ணப்பன் -தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.
9. பாண்டுரங்கன் - மதுரை, திண்டுக்கல், தேனி.
10. கார்மேகம் - புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்.
11. ராஜேந்திரன் - திருநெல்வேலி, கன்னியாகுமரி.
12. தங்கமாரி - நீலகிரி.
13. அ. கருப்பசாமி - தூத்துக்குடி, விருதுநகர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்படும் என்று அமைச்சர் என்.ஆர். சிவபதி தெரிவித்தார். பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் திங்கள்கிழமையோடு நிறைவடைந்தன. இதையடுத்து, கம்ப்யூட்டர் உதவியோடு டம்மி எண்களுக்கு உரிய தேர்வர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளன.
அதன்பிறகு, பிளஸ் 2 மதிப்பெண் முழுவதும் டேட்டா சென்டரில் பதிவு செய்யப்படும். இந்த மதிப்பெண் விவரங்கள் குறைந்தபட்சம் 2 முறை சரிபார்க்கப்படும் என்று தெரிகிறது. அனைத்தும் தயாரான பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. பெரும்பாலும், மே 2-வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் புகைப்படம், பார் கோடு உள்பட 12 பாதுகாப்பு அம்சங்களோடு தயாரிக்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழும் தரமான தாளில் தயாரிக்கப்படுகிறது' என்று பள்ளிக் கல்வி செயலாளர் டி. சபீதா தெரிவித்தார்
No comments:
Post a Comment