ஆசிரியர்கள் அதிருப்தி; பெற்றோர்கள் வரவேற்பு
First Published : 17 Nov 2011 01:10:53 PM IST
நாகப்பட்டினம், திருவாரூர் நவ. 16: ஆசிரியர்களின் வருகைப் பதிவை தலைமை ஆசிரியர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் உறுதி செய்ய வேண்டும் என்ற நடைமுறைக்கு ஆசிரியர்களிடம் அதிருப்தி மேலோங்கியுள்ளது.
நாகை ஆசிரியர் மு. லட்சுமிநாராயணன்: எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்யும் முறை ஆசிரியர்களிடம் அதிருப்தியையும், மன உளைச்சலையுமே ஏற்படுத்தும். இதனால், எந்தவித உறுதியான பயனும் கிடைக்கப் போவதில்லை.
நாகை ஆசிரியர் காந்தி : ஆசிரியர்களின் வருகை உறுதியாகும் என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தை வரவேற்கலாம். ஆனால், இதில் ஏமாற்று வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், இத்திட்டம் மூலம் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்வது சாத்தியமில்லை.
பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் சிலரின் கருத்து: பிற அரசுத் துறை ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய புதிய திட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஆசிரியர்களின் வருகை உறுதி செய்ய மட்டும் புதிய தனி திட்டம் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.
ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய, தொடக்கக் கல்வி அலுவலர்களின் சோதனையை அதிகப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டாலே போதுமானது.
கடலூர் மாவட்டத்தில் தொடக்க நிலையிலேயே பெரும் பிரச்னைக்குள்ளான எஸ்.எம்.எஸ் திட்டத்தால் பெரிய பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை என்றனர்.
பெற்றோர் கருத்து:
மயிலாடுதுறை எஸ். வித்யா: கடமையிலிருந்து நழுவ முயலும் ஒரு சில ஆசிரியர்களைத் திருத்தும் திட்டமாக எஸ்.எம்.எஸ். திட்டத்தைக் கருதலாம்.
வடமட்டம், மங்கையர்கரசி: கிராமப்புற பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகையில் நிலவும் குளறுபடியைத் தடுக்க இந்தத் திட்டம் பயன் தரும் என நம்பலாம்.
திருவாரூரில்...
வரவேற்பு:
ஆசிரியர் - ந. தமிழ்க்காவலன்: ஆசிரியர் பணி என்பது உன்னதமான பணி. ஆசிரியர்களின் வருகையால் மட்டுமே கல்வித் தரம் உயர்ந்து விடாது. ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கற்பிக்க முன்வர வேண்டும்.
பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். எஸ்.எம்.எஸ். மூலம் வருகைப் பதிவை மேற்கொள்ளும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்றார்.
பெற்றோர்- வே. வீரமணி (கொரடாச்சேரி): பள்ளிகளை முன்னர் தலைமையாசிரியர்களே கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வார்கள். ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. அதனால்தான், அரசு இதில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உண்மையாக நடந்து கொள்பவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பால் எந்த பிரச்னையும் இல்லை. இது ஏதோ சுய மரியாதையைப் பாதிக்கிறது, கௌரவத்தைக் கெடுக்கிறது என்று ஆசிரியர்கள் எண்ணிக் கொள்ளத் தேவையில்லை.
இதன்மூலம் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றுதான் ஆசிரியர்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
எதிர்ப்பு
ஆசிரியர் - தி. தியாகராஜன்: அரசின் இந்த அறிவிப்பு ஆசிரியர்களுக்கு சங்கடத்தைத்தான் ஏற்படுத்தும். நகரத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது. ஆனால், கிராமப்புறங்களில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக, பெண் ஆசிரியர்களுக்கு தான் பிரச்னை ஏற்படும்.
இதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஒரு நிமிஷம் காலதாமதமாக வந்தாலே விடுப்பு எனப் பதிவாகிவிடும். இதனால் தலைமையாசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைதான் ஏற்படும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் என்றார்.
பெற்றோர் - ஆர். தட்சிணாமூர்த்தி (திருவாரூர்): - வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்புவதிலும் தவறுகள் செய்ய வாய்ப்புண்டு. இது ஆசிரியர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடு என்றுதான் எடுத்துக் கொள்ள முடிகிறது. இது ஆக்கப்பூர்வமான பலனைத் தராது. அந்தந்தப் பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளது.
இதை தலைமையாசிரியர்கள் முறையாகப் பராமரித்தாலே போதுமானது.
ஒரு சிலர் தவறு செய்கிறார்கள் என்பதால், ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மீதும் தவறான எண்ணத்தை அரசு கொள்ளக் கூடாது என்றார்.
ஆசிரியர்கள் வருகையை எவ்வகையில் பதிவு செய்தாலும், அதிலும் தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், நாம் பெறும் ஊதியம் பள்ளி தொடங்கும் நேரத்துக்கு முன்னதாகவே பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொண்டுவிட்டு, பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பின்னர் வீடு திரும்புவதற்காகத்தான் என்பதை தவறு செய்யும் ஆசிரியர்கள் (உண்மையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் தவிர) உணர்ந்தாலே அரசு எந்தக் கடிவாளமும் போடத் தேவையில்லை என்பது தான் கல்வியாளர்களின் கருத்து.
No comments:
Post a Comment