ஆசிரியர் தகுதித் தேர்வு: 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி
First Published : 24 Nov 2011 02:46:18 AM IST
சென்னை, நவ.23: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மொத்தம் 150-க்கு 60 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால், அது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். ஆசிரியராக விரும்புபவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்' வடிவில் முதல் தாள், இரண்டாம் தாள் என இந்தத் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
இந்தத் தேர்வில் பங்கேற்க தகுதிகள்
1. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
2. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள்.
150 மதிப்பெண்ணுக்குத் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வு 90 நிமிஷங்கள் கொண்டதாக இருக்கும்.
இவையனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறையாவது தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.
தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
முதல் தாளுக்கான கேள்வி அமைப்பு
1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை 30 மதிப்பெண்
2. மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி) 30 மதிப்பெண்
3. மொழித்தாள் -2 (விருப்ப மொழி) 30 மதிப்பெண்
4. கணிதம் 30 மதிப்பெண்
5. சுற்றுச்சூழலியல் 30 மதிப்பெண்
இரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு
1. குழந்தைகள் மேம்பாடு மற்றும்
கற்பித்தல் முறை (கட்டாயம்) 30 மதிப்பெண்
2. மொழித்தாள் - 1 (கட்டாயம்) 30 மதிப்பெண்
3. மொழித்தாள் - 2 (கட்டாயம்) 30 மதிப்பெண்
4. (அ) கணிதம் மற்றும் அறிவியல்
(கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
(ஆ) சமூகவியல் - (சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
(இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு
எழுதினால் போதுமானது.
No comments:
Post a Comment