நாகையில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் முற்றுகை
First Published : 13 Sep 2011 12:33:10 PM IST
நாகப்பட்டினம், செப். 12: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடக்கக் கல்வித் துறை மூலம் செப். 16, 17, 19 ஆகிய தேதிகளில் பொது கலந்தாய்வு நடத்தி, ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கப்படும் என அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், எவ்வித கலந்தாய்வும் இல்லாமல், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 4 ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கி, நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சா. நிலஒளி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இதற்கான ஆணை தொடர்புடைய ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை வழங்கப்படவிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள், கலந்தாய்வு இல்லாமல் பணியிட மாறுதல் உத்தரவை யாருக்கும் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திங்கள்கிழமை மாலை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டச் செயலாளர் மு. லட்சுமிநாராயணன், மாநிலத் துணைத் தலைவர் இரா. முத்துக்கிருஷ்ணன் உள்பட சுமார் 40-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் அலுவலர்கள், அலுவலகத்திலிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்துத் தகவலறிந்த நாகை வருவாய்க் கோட்டாட்சியர் வே. மணிகண்டன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் நிறைவில், அரசு அறிவித்த கலந்தாய்வு நிறைவடையும் முன்பாக எவ்வித பணியிட மாறுதல் உத்தரவும் வழங்கப்படாது என வருவாய்க் கோட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து, இரவு சுமார் 9.30 மணிக்கு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment