தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் என்னென்ன வசதிகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன என்பதை தாய்மார்களே இனி நேரடியாக ஆய்வு செய்யலாம். இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் 5 பேர் கொண்ட அன்னையர் குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பெற்றோரை வாயிலோடு வெளியே அனுப்பும் அவலமும், அரசுப் பள்ளிகளில் உள்ள வசதி குறைவுகள் குறித்து பெற்றோர் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நேரத்தில் மிக முக்கியமான இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
வாரத்தில் ஒரு நாள் பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நேரத்தில் இந்தக் குழுவைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும். இவர்களுக்கான பார்வைப் புத்தகம் ஒன்றையும் பள்ளிகள் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், பள்ளி வாகனங்களில் ஏற்படும் விபத்துகள், அசம்பாவித சம்பவங்கள் அண்மையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, இந்தச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தார்.
அதனையேற்று, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசாணையைப் பிறப்பித்துள்ளது.
அதன் விவரம்: அரசு அதிகாரிகள் தவிர, தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து பள்ளியின் நுகர்வோரான பெற்றோரே நேரில் சென்று சமூக ஆய்வு(இர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் ஐய்ள்ல்ங்ஸ்ரீற்ண்ர்ய்) நடத்த அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது அதிகபட்ச நலம் பயக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த வகையில், மாணவ, மாணவியரின் தாய்மார்கள், வாரத்தில் ஒரு நாள், 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நாள்களில் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.
இவர்களின் பார்வைக் குறிப்புகள் ஒரு பார்வைப் புத்தகத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்பட வேண்டும். தாய்மார்களைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவாறு பல்வேறு
வகுப்புகளில் இருந்து பிரதிநிதிகள் உள்ளடக்கியவாறு அமைதல் வேண்டும்.
வகுப்புகள்
1. மழலையர் வகுப்பு - 1 நபர்
2. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை - 1 நபர்
3. 4-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை - 1 நபர்
4. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை - 1 நபர்
5. 11-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை - 1 நபர்
1. ஒருமுறை பார்வையிட்ட குழுவைச் சேர்ந்தவர்களே திரும்பவும் பார்வையிடும் வண்ணம் இருத்தல் கூடாது. பிரதிநிதிகள் குலுக்கல் முறையில் (தஹய்க்ர்ம் ம்ங்ற்ட்ர்க்)தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
2. பள்ளியில் உள்ள கழிப்பறை, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கணினி வசதி, நூலக வசதி, விளையாட்டு வசதிகள், வகுப்பறை வசதிகள் போன்ற எல்லா வசதிகளையும், பள்ளியின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு இவர்கள் தங்களது பார்வைக் குறிப்பைப் பதிவு செய்ய
வேண்டும்.
இந்தக் குழுவின் பார்வைக் குறிப்புகளை ஒவ்வொரு வாரமும் பார்வையிட்டு குறைபாடுகள் உள்ள இடங்களில் அதனைச் சரி செய்ய தாளாளர், செயலர், முதல்வர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகள் குறித்த குறிப்பு எழுதப்பட்டு, அதில் தாளாளர், செயலர் ஒப்பமிட வேண்டும்.
இந்தக் குழுவினர் பார்வையிடும்போது பள்ளியின் முதல்வரோ அல்லது அவரின் பிரதிநிதியோ உடன் இருக்கலாம்.
பள்ளிகளில் முழுநேர மருத்துவ சேவை
மாணவ, மாணவியரின் நலனைக் காக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய பிற நடைமுறைகள் விவரம்:
* பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 1,500-க்கும் அதிகமாக இருந்தால் முறையான முழுநேர மருத்துவ சேவை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* பள்ளிகளில் முதலுதவி பெட்டிகள் அனைத்து மருந்துப் பொருள்களுடன் அமைக்கப்பட வேண்டும்.
* பள்ளி மாணவர்களின் ரத்தவகை, நீண்ட நாள் நோய் சார்ந்த குறிப்புகள், மருந்து ஒவ்வாமை மற்றும் குடும்ப மருத்துவர் போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை வைத்திருக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி கிணறு, கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கழிவுநீர்த் தொட்டி ஆகியன நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு மூடப்பட்டிருக்க வேண்டும்.
* 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம், 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். அவை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
* அனைத்து இடங்களிலும் மின் இணைப்புகள், ஸ்விட்ச் போன்றவை பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மின் சாதனங்களில் உள்ள பழுதை நீக்கி பாதுகாப்புத் தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மின் அலுவலரின் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.
* உடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறுந்த, துண்டித்த நிலையில் உள்ள மின்சார ஒயர்கள் போன்றவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.
* வீர விளையாட்டுகள் பள்ளி நிலையில் அவசியம் இல்லை. பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட விளையாட்டுகள் விளையாடும் சமயம் தகுந்த பாதுகாப்பு மற்றும் முதலுதவி வசதியுடன் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.
* வகுப்பில் உள்ள வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியைவிட்டுச் சென்றுள்ளனர் என்பதை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் உறுதிசெய்த பிறகே பள்ளியைவிட்டுச் செல்ல வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.