டில்லியில் கல்வி ஆலோசனைக் கூட்டம்: ஆர்.டி.இ. குறித்து ஆய்வு-08-11-2012
ல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின், புதிய அமைச்சர் பல்லம் ராஜு தலைமையில், கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின், 60வது கூட்டம், இன்று டில்லியில் நடக்கிறது. இதில், பல்வேறு மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இம்மாதம், 1ம் தேதி, நடப்பதாக இருந்த கூட்டம், 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இன்று பிற்பகல், 2:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், துறையின் செயலர்கள் பங்கேற்கின்றனர்.தமிழகத்தின் சார்பில், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, இரு துறைகளின் செயலர்களான ஸ்ரீதர் மற்றும் சபிதா ஆகியோர் பங்கேற்பர் என, தெரிகிறது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் செயல்பாடுகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், ஆசிரியர் கல்வி குறித்து, நீதிபதி வர்மா பரிந்துரைகள், புதிய சட்டத்திற்கான வரைவு மசோதா உள்ளிட்ட, 10 அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள், தமிழகத்தில் எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து, அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் விவரிப்பர். இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, முழுமையான அளவில் அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
ஆனால், எந்த மாநிலங்களிலும், இத்திட்டம், 100 சதவீதம் செயல்படுத்தப் படவில்லை என்பது, குறையாக உள்ளது. எனவே, ஒவ்வொரு மாநிலமும், இச்சட்டத்தை எந்த அளவிற்கு அமல்படுத்தி உள்ளது என்பது குறித்து, முக்கியமாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இச்சட்டம் குறித்து, அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடையே, நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் குறித்து, விரிவாக எடுத்துக் கூற, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment