மாணவரே இல்லாமல் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளி-08-11-2012
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சியில், மாணவர்களே இல்லாமல், நான்கு மாதங்களாக, அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியாத அவலமும் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, வடக்கு காடு சக்தி நகர் பகுதியில், நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த ஆண்டு, பத்து மாணவ, மாணவியர் படித்து வந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, காலை, 11 மணிக்கு மேல் பள்ளிக்கு வந்ததால், மாணவர்களது பெற்றோர், தொடக்கப் பள்ளிக்கு, மாணவர்களை அனுப்புவதை தவிர்த்து, தனியார் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.அதனால், இந்த ஆண்டு, ஒரு மாணவர்கள் கூட இல்லாத நிலை ஏற்பட்டது.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேல், 12 முதல், 16 மாணவர்கள் வருவதாக, "போலியாக&' வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டு, பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களே இல்லாத நிலையில், தினமும் சத்துணவு தயார் செய்கின்றனர்.
மாணவர்கள் இல்லாத போதும், கரும்பலகையில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை, தலா இரண்டு மாணவர்களும், நான்காம் வகுப்பில் ஆறு மாணவர்கள், ஐந்தாம் வகுப்பில், நான்கு மாணவர்கள் என, மொத்தம், 16 மாணவர்கள் வந்துள்ளதாக, வருகைப் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, சத்துணவு அமைப்பாளர் முனியம்மாள் ஆகிய இரண்டு பேரும் பணிக்கு வரவில்லை. சத்துணவு சமையலர் கிருஷ்ணவேனி, 12 மாணவர்களுக்கு சமையல் செய்து, முதியவர்களிடம் சத்துணவை வழங்கினார்.
மாணவர்களே இல்லாத பள்ளிக்கு, தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், ஆகியோர், "போலி&' வருகைப் பதிவேடு தயார் செய்து, பள்ளி நடத்தி வருவதாகவும், இவர்களுக்கு, தமிழக அரசு, "வீண்&' சம்பளம் வழங்குவதாக, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இது, கல்வித்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை என்பதற்கு ஒரு சான்றாக உள்ளது.
இதுகுறித்து, வடக்குகாடு சக்தி நகர் பகுதி மக்கள் கூறியாவது: இந்த ஆண்டு, மாணவர்கள் யாரும் வரவில்லை, தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதுப்பற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, சத்துணவு அமைப்பாளர் முனியம்மாள் கூறுகையில், "தினமும், 12 மாணவர்கள் வருகின்றனர், அவர்களுக்கு சமையல் செய்து வழங்குகிறோம்; இன்று, அந்த மாணவர்கள் வரவில்லை&' என்றார்.
ஆத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சுப்ரமணியிடம் கேட்ட போது, "வடக்குகாடு, நகராட்சி தொடக்கப் பள்ளியில், ஓரிரு மாணவர்கள் வருவதாக, தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். 12 மாணவர்கள் வரவில்லை. மாணவர் வருகை மிக குறைவாக இருப்பதால், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு, கிராம பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளோம்&' என்றார்.
No comments:
Post a Comment