SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

தமிழ் முரசு செய்திகள்

Error loading feed.

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Error loading feed.

Daily Thanthi

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, May 28, 2014

அரசு பள்ளிக்கூடங்களின் அபார வெற்றி!

அரசு பள்ளிக்கூடங்களின் அபார வெற்றி!
28.5.2014   ( புதன்கிழமை)
அரசு பள்ளிக்கூடங்களின் அபார வெற்றி!
லகில் எல்லா செல்வங்களிலும் மேன்மையானது கல்விச்செல்வம். தமிழ்நாடு பண்டையகாலம் முதல் கல்வியில் அதிக அக்கறை காட்டியுள்ளதற்கு எண்ணற்ற இலக்கிய சான்றுகள் உள்ளன. மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி 1963–ல் பிராங்க்பர்ட் நகரில், ‘‘மாற்றம்தான் வாழ்க்கையின் சட்டம்’’ என்ற பொருளில் பேசும்போது, காலமும், உலகமும் நிலையாக நின்றுகொண்டு இருப்பதில்லை என்று பேசினார். அது நிச்சயமாக தமிழ்நாட்டில் கல்விக்கு பொருந்தும். பாடத்திட்டம் மட்டுமல்லாமல், கல்வி கற்பிக்கும் முறையில் தொடங்கி, தமிழ்நாடு கல்வித்தரத்தில் பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தை கண்டுள்ளது.       
சமீபத்தில் தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதுவரையில் இல்லாத அளவுக்கு மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெறுவதைப் பார்க்கும்போது, பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு பீடு நடைபோடுகிறது என்று பெருமைகொள்ள முடிகிறது. கணக்கில் நூறு சதவீத மதிப்பெண்களை 3,882 பேர் பெற்றுள்ளனர். கணக்கில் மட்டுமல்லாமல், மேலும் 9 பாடங்களிலும் ஏராளமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினர். இந்த வியப்பு உணர்வு மறைவதற்குள், கடந்த வாரத்தில் 10–வது வகுப்பு அதாவது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 88 சதவீத மாணவர்களும், 93.6 சதவீத மாணவிகளும் தேர்வு பெற்றுள்ளனர். தமிழை முதல் பாடமாக எடுத்து தேர்வில் முதல் இடத்தை பிடித்த 19 பேரில், 18 பேர் மாணவிகள். 2–வது இடத்தை பெற்ற 125 பேரிலும், 101 பேர் மாணவிகள்தான். ‘‘ஆணுக்கு, பெண் இளைத்தவர்களில்லை காண்’’ என்று தமிழக மாணவிகள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
பொதுவாக தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள் என்ற மாயை இந்த தேர்வில் தகர்த்தெறியப்பட்டுள்ளது. 887 அரசு பள்ளிக்கூடங்களில் நூறு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டம், பத்தமடை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் படித்த பாஹிரா பானு என்ற மாணவி மாநிலத்திலேயே முதல் இடத்தை பெற்று இருக்கிறார். சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டு 17 பள்ளிக்கூடங்களில் நூறு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று புதிய சகாப்தத்தை படைத்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக, நிச்சயமாக அரசு பள்ளிக்கூடங்களும் ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அரசு பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் நினைத்தால், சிகரம் என்பது கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கும். அரசு பள்ளிக்கூடங்களில் ஒரு வகுப்பில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பல பள்ளிக்கூடங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை என்று குறைகள் சொல்லப்படுகிறது. சில குக்கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பணியில் போய் சேர்வதில்லை, லீவு போட்டுவிடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தனியார் பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நாங்கள் குறைந்தவர்களில்லை என்ற வேகத்தோடு, அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். அரசு பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் போதுமான அளவில் இல்லை என்ற குறைபாடு உண்டு. இதைப் போக்க, அரசு மட்டும் முயற்சித்தால் போதாது. பொதுமக்களின் ஈடுபாடும் வேண்டும்.
காமராஜர் முதல்–அமைச்சராக இருந்தபோது, நெ.து.சுந்தரவடிவேலு பள்ளிக்கூட கல்வி இயக்குனராக இருந்தார். அப்போது, ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் அந்த பகுதி பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பொருட்கள் பெற்று, அந்தந்த பகுதியில் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. பொதுமக்களையும் கல்வி வளர்ச்சியில் ஈடுபடுத்தும் வகையில், அந்த முறையை மீண்டும் செயல்படுத்த கல்வித்துறை ஆலோசிக்கலாம். மொத்தத்தில், ‘ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்குஉன்னை அர்ப்பணி’ என்று சொல்வார்கள். இந்த அறப்பணியில் உள்ள ஆசிரியர்கள், கல்வித்துறை, பொதுமக்கள் இணைந்து பாடுபட்டால், அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் நூறு சதவீத தேர்ச்சி பெற்று, ரேங்க் பட்டியலில் அந்த மாணவர்கள் பெருமளவில் இடம்பெறும் நாள் தூரத்தில் இல்லை

No comments: