ஆசிரியர்களுக்கு பூக்களால் பாதபூஜை செய்த மாணவர்கள்!
சிவகாசி: திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், ஆசிரியர்களுக்கு பூக்களால் பாத பூஜை செய்த மாணவர்களை, ஆசிரியர்கள் அச்சதை போட்டு வாழ்த்தினர்.இன்றைய சூழ்நிலையில், மாணவர்கள் தவறான வழிகளில் கவனத்தை செலுத்தி, ஆசிரியர்களை எதிரிகளாக நினைப்பதும், சில நேரத்தில் ஆசிரியரை வகுப்பறையிலே தாக்கும் சம்பங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர் தின விழாவை வித்தியாசமாக கொண்டாடினர்.சிவகாசி சத்யசாய் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட விழாவில், 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்கள் 400 பேர், 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வேதபாராயணம், பஜனையுடன் துவங்கிய விழாவில், மாவட்ட தலைவர் மச்சவேல் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மணிவேல் முன்னிலை வகித்தார். சத்யசாய் மருத்துவ அணி டாக்டர் பசுபதி பேசுகையில், ""மாணவர்களை உயர் குணம் அடைய செய்வது ஆசிரியர்தான். ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தில் இருக்கும் நேரத்தை விட, மாணவர்களிடம் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இறைவன் வடிவில் மாணவர்களை, ஆசிரியர்கள் ஆசிர்வதிக்க வேண்டும். மாணவர்களின் பணிவுதான் மேன்மையை கொடுக்கும்,என்றார். இதை தொடர்ந்து மாணவர்கள், தாங்கள் கொண்டு வந்த பூக்களை, வகுப்பு ஆசிரியர்களின் பாதங்களில் போட்டாவாறு வணங்கினர். இதைதொடர்ந்து, மாணவர்களை ஆசிரியர்கள் "அட்சதை போட்டு வாழ்த்தினர். இது, மாணவர்கள், ஆசிரியர்களிடையே, புதுமையான குருபக்தியை வெளிப்படுத்தியது. "இதுபோன்ற நல்லுறவு வளர்க்கும் விழாக்கள் நடந்தால், இளைஞர் சமுதாயம் மேம்படும்,என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment