"அலைக்கழிக்கப்படும்' தலைமையாசிரியர்கள்
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012,05:37 IST
கருத்தை பதிவு செய்ய
மதுரை:அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை, பள்ளிக்கு எடுத்துச்செல்வதில் திட்டமிடல் இல்லாததால் தலைமையாசிரியர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு சார்பில் புத்தகம், நோட்டு, சீருடை, புத்தக பை என்று, மாணவர்களுக்கு 13 வகையான விலையில்லா பொருட்கள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொன்றாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாவட்டத்துக்கான பொருட்கள் சி.இ.ஓ., அலுவலகம் வந்து, பின், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் வழியாக தலைமையாசிரியர்கள் பெற்று, மாணவர்களுக்கு வழங்குகின்றனர்.இதில், உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு வரும் பொருட்கள் ஏதாவது ஒரு இடத்தில் அல்லது ஒரு பள்ளியில் குவிக்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள் அங்கு சென்று, நோட்டு, புத்தகங்களை, "வாடகை' வாகனம் மூலம் பள்ளிக்கு எடுத்து செல்கின்றனர். கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகள் அனைத்துக்கும், தல்லாகுளம் பட்டுப்பூச்சி தொடக்க பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. பல கி.மீ., தூரத்தில் இருந்தும் அந்த பள்ளிக்கு சென்று, பொருட்கள் எடுத்துச்செல்வதில் அலைச்சல் ஏற்படுவதாக தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதை தவிர்க்க, அந்தந்த பள்ளிக்கே நேரடியாக கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமையாசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்