ஆசிரியர் தினம்: முதல்வர் வாழ்த்து
First Published : 05 Sep 2012 12:00:00 AM IST
சென்னை, செப்.4: ஆசிரியர் தினத்தையொட்டி (செப்டம்பர் 5), முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழகத்தில் பிறந்து ஆசிரியராகப் பணிபுரிந்து தமது நற்சிந்தனையாலும், நல்
ஒழுக்கத்தினாலும் மிக உயர்ந்து நாட்டின் உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியை வகித்து, ஆசிரியர் பணிக்குப் பெருமை தேடித் தந்தவர் எஸ்.ராதாகிருஷ்ணன்.
அவருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம். நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய கருவி உண்டு என்றால் அதுதான் கல்வி. அந்தக் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையை பெற்றவர்கள் ஆசிரியர்கள். பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, தம்மிடம் பயிலும் மாணவர்களிடம் அன்பு காட்டி அரவணைத்து வழிகாட்டுவதன் மூலமே சிறந்த கல்வியைப் பெற்று சமுதாய வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை ராதாகிருஷ்ணன் அறிந்திருந்தார்.
அதன்படி, செயல்பட்டு ஆசிரியர் தொழிலுக்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்தார். அவர் காட்டிய வழியில் ஆசிரியர்கள் அனைவரும் நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் மாணவர்களுக்கு விதைத்து சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மாணவச் சமுதாயம் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கி உலகம் போற்றிட வாழ தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களைச் செம்மையான முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி மாணவர்களை உருவாக்க வேண்டியது ஆசிரியர்களின் முதன்மையான கடமையாகும். மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்வுக்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment