Pages

Tuesday, September 18, 2012

ADMISSION IN GOVT SCHOOLS DECREASED-DINAMALAR


தமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகளில், வசதி வாய்ப்புகளும், ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால், பாதிக்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளிகளுக்கு, மூடுவிழா நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.

தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. துவக்கக் கல்வியை தரமானதாக்க, உலக வங்கி உதவியுடன், பத்து ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கம் துவங்கப் பட்டது.இத்திட்டம் துவக்கப்படும் முன், அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வகுப்பறை, கழிவறை, குடி நீர் வசதிகள் குறைவாகவும் இருந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளால், அனைத்து பள்ளிகளிலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கல்வி முறையும் மாற்றி அமைக்கப்பட்டு, மாணவர்கள் தாமாகவே கற்றுக் கொள்ளும், செயல்வழிக் கற்றல் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டது. 

ஏராளமான துவக்கப் பள்ளிகள் துவங்கியதுடன், புதிய ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டன. நாற்பது மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாறி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை உருவானது.கடந்த பத்து ஆண்டுகளில், துவக்கப் பள்ளிகளின் நிலை, எதிர்பார்த்த அளவிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கையோ, தலைகீழாக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியில், ஆண்டுக்கு, 11.72 சதவீத வளர்ச்சி இருக்கும் நிலையில், துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த, 2004 - 05ல், 62 லட்சமாக இருந்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, தற்போது, 58 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அப்போது, 41:1 என்றிருந்த ஆசிரியர் மாணவர் விகிதம், தற்போது, 27:1 என்ற நிலைமைக்கு மாறியுள்ளது. துவக்கப் பள்ளிகளில், ஓய்வுபெறும் பணியிடங்களையும், பணி நிரவல் செய்வதன் மூலமே நிரப்பிவிடும் நிலை உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள, அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது

:குழந்தைகளின் கல்வியில் அக்கறை கொண்டுள்ள அனைத்து பெற்றோரும், தங்களது குழந்தைகளை, தனியார் பள்ளியில் சேர்க்கவே விரும்புகின்றனர். அரசு பள்ளியில் படிப்பதை, கவுரவக் குறைச்சலாக சில பெற்றோர் நினைக்கின்றனர். அரசு ஊழியரின் குழந்தை கூட, அரசு பள்ளியில் படிப்பதில்லை.கல்வி குறித்து, ஆசிரியர்களிடம் கேள்வி கேட்காத பெற்றோரின் குழந்தைகள் மட்டுமே, அரசு பள்ளியில் படிக்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களிடம், கல்வி கற்பித்தலில் அதிக அக்கறை காட்டாததும் இதற்கு காரணம்.இவ்வாறு, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment