Pages
(Move to ...)
Home
▼
Thursday, August 28, 2014
நாகை உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நாகை உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நாகப்பட்டினம்,
ஆக.28-
நாகை உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
நாகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன், வட்டார செயலாளர் பாலசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா பொருட்களை அந்தந்த பள்ளிகளுக்கு சென்று வழங்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனரை கேட்டுக் கொள்வது. பள்ளி நேரங்களில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களால் அடிக்கடி நடத்தப்படும் தலைமையாசிரியர் கூட்டங்களால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. எனவே தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களை தொலைபேசி அல்லது மாதாந்திர அறிக்கையின் மூலமாக பெற்றுக்கொண்டு தலைமையாசிரியர் கூட்டங் களை குறைக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்
நாகை உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ள 5 காலி பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளதால், அந்த பணிகளில் ஆசிரியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் கற்பிக்கும் நேரம் குறைகிறது. எனவே அந்த காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகை ஒன்றியத்தில் உள்ள 13 பள்ளிகளில் உள்ள கூட்டுனர்களுக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. மிகக்குறைந்த ஊதியம் பெறும் இவர்களுக்கு ஊதியத்தை அந்தந்த மாதத்தில் காலதாமதமின்றி வழங்க நாகை உதவி தொடக்கக் கல்வி அலுவலரை அறிவுறுத்துமாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி ஆவராணிஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சம்பத், பரமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் தனுசுமணி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment